போக்குவரத்து ஒழுங்குவிதிகள் குறித்து சாரதிகளுக்கு விழிப்புணர்வு தேவை
இலங்கையில் வீதிப் போக்குவரத்து விபத்துக்கள் கடந்த ஒரிரு மாதங்களாக குறைந்திருந்தன. இது நாட்டு மக்களுக்கு ஆறுதலாக இருந்தது. ஆனாலும் நேற்று முன்தினம் மிகவும் கோரமான விபத்தொன்று களுத்துறை மாவட்டத்திலுள்ள வஸ்கடுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
எல்பிட்டியவிலிருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பயணிகள் பஸ் வண்டியொன்றும் முல்லைதீவிலிருந்து தங்காலை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் அரை சொகுசு பயணிகள் பஸ் வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. அதிகாலை சுமார் 4.45மணியளவில் இடம்பெற்ற இக்கோர விபத்தினால் ஆறு பேர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததோடு, 55 க்கு மேற்பட்டோர் காயங்களுக்கும் உள்ளாகினர். அவர்கள் களுத்துறை மற்றும் பாணந்துறை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கோர விபத்தானது, கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த பயணிகள் பஸ் வண்டி பாதுகாப்பற்ற முறையில் வாகனமொன்றை முந்திச் செல்ல முற்பட்டதன் விளைவாகவே இடம்பெற்றுள்ளது. இது ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. என்றாலும் இவ்விபத்தில் இரண்டு பஸ் வண்டிகளும் கடும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.
இவ்விரு பஸ் வண்டிகளும் மோது-ண்டு வெளிப்பட்ட சப்தம் அந்த அதிகாலையில் பாரிய குண்டொன்று பிரதேசத்தில் வெடித்து விட்டதோ என்ற அச்சத்தை பிரதேச மக்கள் மத்தியில் ஏற்படுத்தின. இருப்பினும் அந்த சப்தத்திற்கு இரண்டு பஸ் வண்டிகள் மோதுண்டதே காரணம் என்பதை மக்கள் சில நிமிடங்களுக்குள் அறிந்து கொண்டனர்.
ஆனாலும் இவ்விபத்துச் சம்பவத்தைத் தொடர்ந்து கொழும்பு, காலி வீதியில் வஸ்கடுவ பிரதேசத்தில் சில மணித்தியாலங்கள் வாகன நெரிசலும் ஏற்பட்டன. இருந்த போதிலும் கடந்த சில வருடங்களாக நாட்டில் வாகன வீதி விபத்துக்களும் அதனால் ஏற்படும் உயிரிழப்புக்கள், சேதங்களும் பெரிதும் அதிகரித்துக் காணப்படுகின்றன. அதாவது நாளொன்றுக்கு 6 முதல் 8 பேர் வரை வீதி போக்குவரத்து விபத்துக்களில் உயிரிழப்பதாக பொலிஸ் மற்றும் சுகாதாரத்துறை தரவுகள் தெரிவிக்கின்றன.
இலங்கை ஒரு வளர்முக நாடாக இருந்தபோதிலும் உலகில் வீதி போக்குவரத்து விபத்துக்கள் அதிகரித்துக் காணப்படும் நாடுகளில் ஒன்றாக அண்மைக்காலம் முதல் விளங்குகின்றது. இது ஆரோக்கியமான நிலைமை அல்ல.


No comments:
Post a Comment
எமது இணையத்தை பார்வையிட்டது நன்றிகள் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்..